search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை மீனாட்சி அம்மன் கோவில்"

    தமிழகத்தின் முக்கிய இடங்கள் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என தொலைபேசி மூலம் வந்த மிரட்டலையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
    மதுரை:

    தமிழகத்தின் முக்கிய இடங்கள் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என தொலைபேசி மூலம் வந்த மிரட்டலையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    மதுரையில் ரெயில் நிலையம், விமான நிலையம், வழிபாட்டுத் தலங்கள், பஸ் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

    தற்போது வெடிகுண்டு மிரட்டலையடுத்து வழக்கத்தைவிட கோவிலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் அடிக்கடி மெட்டல் டிடெக்டர் உதவியுடன் கோவிலில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் இன்று கோவில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார். 5 கோபுர நுழைவு வாயில்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    ஆய்வுக்கு பின்னர் போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மதுரை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு பணியில் கூடுதலாக 157 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடைமைகள் அனைத்தும் பரிசோதிக்கப்படுகின்றன.

    நகரில் எங்காவது சந்தேகப்படும்படியாக பொருட்கள் ஏதும் கிடந்தால் பொதுமக்கள், போலீசுக்கு தகவல் தர வேண்டுகிறோம்.

    மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் உச்சகட்ட விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேற்கண்டவாறு அவர் கூறினார்.

    மதுரை ரெயில் நிலையத்தில் நேற்று தீவிர சோதனை நடத்தப்பட்டது. ரெயில்வே இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இன்றும் 2-வது நாளாக ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ரெயில்வே டி.எஸ்.பி. மன்னர் மன்னன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ரெயில் நிலையம், தண்டவாளம், வளாகப்பகுதிகளில் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். ரெயில் நிலைய கிழக்கு, மேற்கு நுழைவு வாயிலில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இங்கிருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரெயில்களின் அனைத்து பெட்டிகளிலும் மெட்டல் டிடெக்டர், மோப்ப நாயுடன் சோதனை நடத்தப்பட்டது.

    இதற்காக சென்னையில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற வெடிகுண்டு நிபுணர்கள் மதுரைக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். மதுரை ரெயில் நிலையத்திற்கு வரும் அனைத்து ரெயில்களிலும் சோதனை நடந்தது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறுமழை பெய்தாலே தண்ணீர் கோவிலுக்குள் புகுந்துவிடும். நேற்று நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக கோவிலின் கிழக்கு கோபுர நுழைவு வாயிலில் தண்ணீர் புகுந்தது. #MeenakshiAmmanTemple
    மதுரை:

    மதுரையில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த மழையால் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

    மதுரை மாவட்டத்தில் தற்போது சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தண்ணீர் நிரம்பி வருகிறது.

    நேற்று 7-ந்தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் காலை முதல் மாலை வரை சில நிமிடங்களில் மிதமான மழை பெய்தது.

    நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரென கனமழை பெய்தது. சுமார் 1மணி நேரம் இடி, மின்னலுடன் பெய்த மழை காரணமாக மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழை, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெரியார் பஸ் நிலையப்பகுதிகளிலும் வெள்ளம் கரை புரண்டது.

    மதுரை மாவட்டத்தில் மொத்தம் 85 செ.மீ. மழை பெய்துள்ளது. அதன் சராசரி அளவு 4 செ.மீ ஆகும்.

    கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனை சரி செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறுமழை பெய்தாலே தண்ணீர் கோவிலுக்குள் புகுந்துவிடும். நேற்று நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக கோவிலின் கிழக்கு கோபுர நுழைவு வாயிலில் தண்ணீர் புகுந்தது. மேலும் கோவிலுக்குள் உள்ள வடக்காடி வீதியில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இன்று காலை கோவில் ஊழியர்கள் மோட்டார் மூலம் வெளியேற்றினர். #MeenakshiAmmanTemple

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பசும்பால், சுடுதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. #MaduraiMeenakshiTemple
    மதுரை:

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள்.

    வடமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருவதால் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி கும்பிட கூட்டம் அலைமோதும்.



    கைக்குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் பல மணிநேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் போது சில குழந்தைகள் வயிற்றுப்பசி உள்ளிட்ட காரணங்களால் அழுவதுண்டு.

    இது பக்தர்களுக்கு சாமி கும்பிடும் நேரத்தில் இடையூறுகளை ஏற்படுத்துவதாக கோவில் நிர்வாகம் கருதியது. இதனை சரி செய்யும் வகையிலும் குழந்தைகளின் பசியை போக்கவும் பசும்பால் மற்றும் சுடுதண்ணீர் வழங்க முடிவு செய்யப்பட்டு தற்போது அம்மன் சன்னதியில் இலவச பால் மற்றும் சுடுதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கென 2 பெண் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குழந்தைகளுக்கு பால் வழங்கும் இந்த முயற்சிக்கு பக்தர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கோவில் இணை கமி‌ஷனர் நடராஜன் கூறியதாவது:-

    கோவிலில் சாமி கும்பிடும்போது குழந்தைகளின் அழுகுரலை கட்டுப்படுத்த இலவச பசும் பால் திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

    இந்த திட்டம் பக்தர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளதால் தினமும் அபிஷேகத்திற்கு போக மீதம் உள்ள 20 லிட்டர் பசும்பால் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் பெரிய கேனில் சுடுதண்ணீரும் வைக்கப்பட்டு கோவில் ஊழியர்கள் மூலம் டம்ளர்களில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த முயற்சிக்கு பக்தர்களின் வரவேற்பு அதிகரித்துள்ளதால் இதற்கென தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு குழந்தைகளின் பசி தீர்க்கப்படுகிறது.

    இது போன்று மற்ற கோவில்களிலும் குழந்தைகளுக்கு பசும்பால் வழங்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MaduraiMeenakshiTemple

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட 15 கோவில்களில் கடை வைத்திருப்பவர்கள், அந்த கடைகளை காலி செய்ய டிசம்பர் 31-ந் தேதி வரை காலஅவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த பிப்ரவரி 2-ந் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, முதல்-அமைச்சர் தலைமையில் உயர்மட்ட குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட 15 கோவில்களை சுற்றி கடை வைத்திருப்பவர்களுக்கு கடந்த பிப்ரவரி 14-ந் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், கடைகளை காலி செய்யும்படி கூறப்பட்டிருந்தது.

    இந்த நோட்டீசை எதிர்த்து குமார் என்பவர் உள்பட ஏராளமான கடைக்காரர்கள் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தார்.

    பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டில் வைத்து நேற்று நீதிபதி பிறப்பித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களின் தொல்லியல் தன்மைகளை பாதுகாக்க வேண்டும் என்று அரசு எடுத்த முடிவின் அடிப்படையில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவில், மேலமாசி வீதியில் உள்ள மதனகோபால சுவாமி கோவில், அண்ணா நகர் சேவுகப் பெருமாள் கோவில், மதுரை கிருஷ்ணராயர் தெப்பம் ஆஞ்சநேயர் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி கோவில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில், குற்றாலம், திருக்குற்றாலநாதர் சுவாமி கோவில்,

    சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் (ஆண்டாள்) கோவில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில், திருச்சி நாகநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் என்று 15 கோவில்களில் கடை வைத்திருப்பவர்களுக்கு, கடையை காலி செய்யும்படி இந்து சமய அறநிலையத்துறை கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

    அதாவது, கோவில் வளாகத்துக்குள்ளும், வெளியேயும், கோவில் மதில்சுவர் அருகேயும் கடை வைத்திருப்பவர்கள், பூஜை பொருட்கள், பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    பல ஆண்டுகளாக, பல தலைமுறைகளாக இந்த கடைகளை நடத்தி வருகின்றனர். அவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ‘மனுதாரர்கள் வைத்திருக்கும் கடைகளினால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. எனவே, கடைகளை காலி செய்தால், இவர்களது வாழ்வாதாரம் பாதிக்கும்’ என்று வாதிட்டனர். கோவில்களை பாதுகாப்பது என்பது பொதுநலன் ஆகும். எனவே, கடை வைத்திருப்பவர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கூறினாலும், தனிப்பட்டவர்களின் நலனைவிட, பொதுநலன் தான் முக்கியமாகும்.

    அதனால், கோவிலை சுற்றியுள்ள கடைகளை காலி செய்யவேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை சரியான முடிவினை எடுத்துள்ளனர். அந்த நடவடிக்கையில் சட்டவிரோதம், விதிமீறல் எதுவும் இல்லை. எனவே, இந்த நோட்டீசில் தலையிட இந்த ஐகோர்ட்டு விரும்பவில்லை.

    அதேநேரம், மனுதாரர்கள் எல்லோரும் பல ஆண்டுகளாக, கடை வைத்திருப்பதால், அவர்களுக்கு மாற்று இடம் வழங்க முடியுமா? என்று இந்து சமய அறநிலையத்துறையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை, திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் கோவில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் கடைகள் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் மாற்று இடம் வழங்க முடியும். மற்ற கோவில்களில் மாற்று இடம் வழங்க இடம் இல்லை’ என்று கூறியது.

    எனவே, இந்த இரு கோவில்களில் கடை வைத்திருப்பவர்கள், மாற்று இடம் கேட்டு மனு செய்தால், அதை கருணையுடன் அதிகாரிகள் பரிசீலிக்கவேண்டும். பிற கோவில்களில் கடை வைத்திருப்பவர்களை உடனடியாக காலி செய்ய உத்தரவிட்டால், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அவர்களுக்கு காலஅவகாசம் வழங்கவேண்டும்.

    அதனால், வருகிற டிசம்பர் 31-ந் தேதிக்குள் அவர்கள் கடைகளை காலி செய்யவேண்டும். அதுவரையில் குத்தகை தொகை மற்றும் வாடகை கட்டணத்தை கோவில் நிர்வாகத்திடம் முறையாக செலுத்த வேண்டும். அதுமட்டுமல்ல, டிசம்பர் 31-ந் தேதி வரையில், கடை நடத்திக்கொள்ள அனுமதி கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனுவும் கொடுக்க வேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.#tamilnews
    ×